மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் மனிதர்களுக்கு கடும் இன்னல்களை தருகின்ற அதே நேரத்தில், பல்வேறு நல்ல மனிதர்களையும் நமக்கு அடையாளம் காட்டுகிறது. சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது இதனை தமிழகம் கண்கூடாக பார்த்தது. பல்வேறு தரப்பினும் போட்டி போட்டு ஒருவருக்கு ஒருவர் உதவினார்கள். இந்த உதவிக் கரங்களால் தான் வெள்ள பாதிப்பில் இருந்து வேகத்தில் மீண்டது.
இந்த முறை கேரள வெள்ள பாதிப்பிலும் அப்படி பலரை காண முடிந்தது. ராணுவ வீரர்கள் ஒருபுறம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், அவர்களை மிஞ்சும் வகையில் கேரள மீனவர்கள் துரிதமாக செயல்பட்டு பலரையும் காப்பாற்றினார்கள். மேலும், அம்மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், இளைஞர்கள் என பலரும் களத்தில் செயல்பட்டார்கள். தற்போது வெள்ளம் வடிந்து வரும் நிலையில் மக்கள் தங்களது வீடுகளில் குடியேறி வருகிறார்கள். ஆனால், சேரும், சகதியுமாக கடப்பதால் பலரும் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அவற்றை தூய்மை செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தங்களுக்கு சொந்தமான வீடுகளை அவரர் தூய்மை செய்ய சீக்கிய தன்னார்வலர்கள் சிலர் தேவாலயங்கள், கோயில்களை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்சா என்ற அமைப்பை சேர்ந்த சீக்கிய தன்னார்வலர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சர்ச் ஒன்றில் சமீபத்தில் அவர்கள் சுத்தம் செய்தனர்.
இந்நிலையில், ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு பகுதியில் உள்ள தலவாடி கிராமத்தில் உள்ள பனயன்னூர் கவிலம்மா கோயிலில் அவர்கள் இன்று சுத்தம் செய்தார்கள். கோயிலில் கிடந்த சேற்றையும், சகதியையும் அவர்கள் அள்ளி அப்புறப்படுத்தினர். அந்தக் கோயிலைச் சேர்ந்த சிலர் சிக்கிய தன்னார்வலர்களை அணுகியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கல்சா தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த குர்பிரீட் சிங் என்பவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு அளித்த பேட்டியில், “கடந்த சனிக்கிமழை ஓணம் பண்டிகை சென்று கொண்டிருந்தது. நாங்கள் சர்ச் ஒன்றில் சுத்தம் செய்து கொண்டிருந்தோம். அப்போது மோகன் தாஸ் என்ற கோயில் ஊழியர் வந்தார். அவர் கைகளில் ஒரு புகைப்படம் வைத்திருந்தார். தங்கள் கோயிலை சுத்தம் செய்ய உதவி வேண்டும் என்று கோரினார். சர்சை சுத்தம் செய்து முடித்த பின்னர் கோயிலுக்கு வருவதாக நாங்கள் அவரிடம் கூறினோம். ஓணம் பண்டிகையொட்டி மக்கள் கோயிலுக்கு வரமுடியாத நிலையில் உள்ளார்கள் என்று கவலையுடன் அந்த மனிதர் கூறினார். எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ வருகிறோம் என்று சொல்லி அனுப்பினோம். மனிதாபிமானம் என்பது எங்களை பொறுத்தவரை எல்லோருக்கும் ஒன்றுதான்” என்றார்.
சுமார் இரண்டு நாட்களாக சீக்கிய தன்னார்வலர்கள் அந்தக் கோயிலை கடினமாக வேலைகள் செய்து தூய்மை செய்தனர். முன்னதாக சர்ச்சினை சுத்தம் செய்வார்கள், ஆனால் கோயிலை சுத்தம் செய்ய மாட்டார்கள் என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்ததாக தன்னார்வலர்கள் ஒருவர் வருத்தமுடன் கூறினார். தங்களால் சர்ச்சை சுத்தம் செய்ய முடியும் என்றால், கோயிலையும் சுத்தம் செய்ய முடியும், வேறுபாடு எதுவும் கிடையாது என்று அவர் கூறினார்.