மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஓராண்டிற்கு அனைத்து அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்களையும் கேரள அரசு ரத்து செய்துள்ளது.
நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இப்படியொரு பேரிடர் வரும் என கேரள மக்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். பெருமழையில் மிகப்பெரிய வீடுகளும் சரிந்து விழுந்த காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்தது. மீளாத் துயரில் சிக்கிக் கொண்ட கேரள மக்களை காக்க பல்வேறு தரப்பினரும் தங்களது கரங்களை நீட்டினார்கள். இருப்பினும் தாங்கள் இழந்தவற்றை மீட்டெடுக்க முடியாமல் கேரள மக்கள் தவித்து வருகின்றனர். பலரும் தங்கள் வீடுகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளத்தால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே ஓணம் பண்டிகையை கேரள அரசு ரத்து செய்து இருந்தது. இந்நிலையில், அடுத்த ஓராண்டிற்கு அனைத்து அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்களையும் கேரள அரசு ரத்து செய்துள்ளது. கேரள சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட எல்லா நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், அதிகப்படியாக பணம் செலவாகும் எந்த நிகழ்ச்சியும் அரசு சார்பில் நடத்தப்படாது என்றும் கேரள அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து நிதியும் மழை, வெள்ள பாதிப்புகளுக்கே செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள அரசின் எந்தவொரு துறை சார்பிலும் அடுத்த ஓராண்டிற்கு விழாக்கள் எதுவும் நடத்தப்படாது. அனைத்து நிதியும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவரை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ1,036 கோடி சேர்ந்துள்ளது. நிவாரண நிதியை மக்களிடம் இருந்து சேகரிக்க கேரள அமைச்சர்கள் 14 நாடுகளுக்கு செல்ல உள்ளார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.