கோழிக்கோடு: மருத்துவ படிப்பை முடிக்காமல் சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை அடையாளம் காட்டினார் அவருடன் படித்த ஜூனியர் டாக்டர்.
கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் வினோத்குமார். 60 வயதான இவருக்கு உடல்நலை சரியில்லாததால் அருகில் இருந்த கொட்டக்கடவ் பகுதியில் இருந்த டிஎம்எச் என்ற தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்தவர் கடந்த வாரம் இறந்துள்ளார். இவருக்கு அஷ்வின் என்ற மகனும் மாளவிகா என்ற மருமகளும் இருக்கின்றனர். இருவரும் சண்டிகரில் மருத்துவராக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தந்தையின் இறுதி சடங்கிற்காக தனது மனைவியுடன் சண்டிகரிலிருந்து கோழிக்கோடு வந்துள்ளார் அஷ்வின். தந்தையின் இறுதி சடங்குகள் முடித்தபிறகு தந்தை இறந்த மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை பார்த்துள்ளார் அஷ்வினும், மாளவிகாவும். பிறகு மருத்துவமனை போர்டில் அபு ஆபிரகாம் லூக் என்ற மருத்துவரின் பெயரைக்கண்ட மாளவிகாவிற்கு, இவர் தன்னுடன் படித்த மருத்துவரா? என்ற சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. அதன்படி அந்த பெயரைக்கொண்ட மருத்துவர் பற்றி விசாரித்து இருக்கிறார்.
மாளவிகாவின் சந்தேகம் பொய்யாகவில்லை. மாளவிகா தன்னுடன் படித்த சீனியர் மருத்துவரான அபு ஆபிரகாம் லூக் தான் அவர் என்பதை தெரிந்துக்கொண்டு அதிர்ச்சியானார்.
காரணம் அபு ஆபிரகாம் லூக் படிப்பை பாதியில் விட்டுவிட்டு கல்லூரியை விட்டு வெளியேறியவர். அதன்பிறகு அவர் படிப்பை தொடரவில்லை என்பதையும் தெரிந்து வைத்து இருக்கிறார். ஆனால் மருத்துவமனையில் அவர் மருத்துவராக பணியாற்றியது மாளவிகாவை அதிர்ச்சியடையச் செய்தது. இது குறித்து அவர் போலிசாரிடம் புகாரளித்தார்.
போலிசார் விசாரணையில் திருவல்லாவைச் சேர்ந்த அபு ஆபிரகாம் லூக் கடந்த 2011ம் ஆண்டு கோழிக்கோட்டில் இருந்த தனியார் மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படித்து இருக்கிறார். அவர் தொடர்ந்து செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்து படிப்பை முடிக்காமல் பாதியிலேயே கல்லூரியை விட்டு சென்றுவிட்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. அதனால் இவர் பெயர் கொண்ட மற்றொரு மருத்துவரின் பதிவு எண்ணை பயன்படுத்தி 9 மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றியதும் தெரியவந்துள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் இவரை பணியில் அமர்த்தும் பொழுது இவரின் பெயரை குறித்து கேட்டும் இருக்கிறது. தனக்கு இருபெயர்கள் இருப்பதாகவும் இவர் கூறியிருக்கிறார். இந்நிலையில் இவரின் மருத்துவம் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும், மருத்துவமனையும், மக்களும் இவர் மீது நல்ல அபிப்ராயம் வைத்துள்ளதாக போலிசாருக்கு தகவல் வந்துள்ளது.