தேக்கடி வனப்பகுதியில் இறந்த நிலையில் கிடந்த 20 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி காட்டுயானையின் உடல் மீட்கப்பட்டது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தின் தேக்கடி வனச்சரகத்தில், வனத்துறையினர் கண்காணிப்புபணியில் ஈடுபட்டிருந்தபோது, பச்சக்கானம் என்ற காட்டுப்பகுதியில் துர் நாற்றம் வீசுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடம் சென்று பார்த்தபோது, காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்ததுள்ளது.
யானையின் உடலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் தலைமையிலான குழுவினர் நிகழ்விடத்திலேயே உடற்கூறு பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் யானை கர்ப்பமாகி இருப்பதும், குறை மாதங்களே ஆன யானைக்குட்டியும் உயிரிழந்த நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. 20 வயது மதிக்கக்கத்தக்க இந்த கர்ப்பிணி யானையின் நுரையீரலில் தண்ணீர் தேங்கியிருப்பது உடற்கூறு பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் நுரையீரல் நோயால் சுவாசக்கோளாறு ஏற்பட்டு யானை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.