கேரளாவில் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவரது நுரையீரலில் 4 சென்டிமீட்டர் நீளமுள்ள கரப்பான் பூச்சி சிக்கியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மருத்துவர் டிங்கு ஜோசப் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நோயாளிக்கு அறுவைச்சிகிச்சை செய்து கரப்பான் பூச்சியை அகற்றினர். கரப்பான் பூச்சி உள்ளே அழுக ஆரம்பித்துவிட்டதால் நோயாளியின் சுவாசப் பிரச்னை மோசமடைந்திருக்ககூடும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
நோயாளியின் நுரையீரலில் இருந்து கரப்பான் பூச்சியை அகற்ற மருத்துவர்கள் குழுவிற்கு 8 மணி நேரம் எடுத்துள்ளது. நோயாளிக்கு ஏற்கெனவே மூச்சுத்திணறல் பிரச்னைகள் இருந்ததால், அறுவைச்சிகிச்சை மேலும் கடினமாகிவிட்டது. கரப்பான் பூச்சி நோயாளியின் நுரையீரல் முந்தைய சிகிச்சைக்காக தொண்டையில் வைக்கப்பட்ட குழாய் வழியாகச் சென்றடைந்ததாக கூறப்படுகிறது. தற்போது நோயாளி முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று, அமெரிக்காவில் உள்ள புளோரிடா பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு, கடந்த அக்டோபர் மாதம் அவர் மூக்கின் குழியில் இருந்து சுமார் 150 புழுக்களை மருத்துவர்கள் உயிருடன் தனித்தனியாக எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.