கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தவர் ஷினி. இவர் அப்பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுகிழமை காலை இப்பகுதியில் மழை பெய்த சமயத்தில், கோட் சூட்டுடன் ஷினியின் வீட்டுக்கு சென்ற ஒரு பெண் ஒருவர், ஷினிக்கு கொரியர் வந்ததாக கூறியிருக்கிறார். அப்போது ஷினியின் கணவரான சுஜீத் மற்றும் சுஜீத்தின் தந்தையான பாஸ்கரன் நாயர், கொரியரை தங்களிடம் தருமாறு அந்த பெண்ணைக் கேட்டுள்ளனர்.
ஆனால் அப்பெண் கொரியர் ஷினியின் பெயரில் வந்துள்ளதால் அவர் கையொப்பமிட வேண்டும் என்று கூறவே, ஷினி வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்துள்ளார். அச்சமயம் தனது கோட் பாக்கெட்டில் வைத்திருந்த துப்பாக்கியால் ஷினியை அப்பெண் மூன்று முறை சுட்டார். இதில் ஷினியின் கை காயமுற்றது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கினர் போலீஸார். அப்போது கொரியர் கொடுக்க வந்த பெண் ஒரு காரில் வந்திறங்கியதை பார்த்த அவர்கள், அந்த காரின் எண்ணைக் கொண்டு வழக்கை விசாரித்து குற்றவாளியை கண்டுபிடித்தனர்.
அதன்படி, கொரியர் பெண் போல வந்தது தீப்திமோல் ஜோஸ் (37) என்பவர்தான். இவர் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் ஒரு மருத்துவர்.
தீப்திமோல் ஜோஸ்ஸுக்கும் ஷினியின் கணவரான சுஜீத்திற்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுஜீத் கடந்த சில நாட்களாக தீப்தியுடனான நட்பை முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. சுஜீத்தின் இத்தகைய செலுக்கு காரணம் ஷினிதான் என்று நினைத்து அவரின் கதையை முடிக்க திட்டம் தீட்டியுள்ளார் மருத்துவரான தீப்தி.
இதற்காக துப்பாக்கி ஒன்றை ஆன்லைனில் வாங்கியவர், யூடியூப்பை பார்த்து சுடவும் கற்றுக்கொண்டுள்ளார். மேலும் ஷினியை அருகில் இருந்து சுட்டால் அவர் இறந்துவிடுவார் என நினைத்து கொரியர் கொடுப்பது போன்று சென்று ஷினியை கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அத்துடன் இல்லாமல், போலீசாரின் கவனத்தை திசை திருப்ப... தனது காரின் நம்பர் பிளேட்டையும் மாற்றி இருகிறார். அதே சமயம், மருத்துவமனைக்கு சென்று தான் பணியில் இருப்பது போன்று அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.
தீப்திமோல் ஜோஸ்தான் குற்றவாளி என்று கண்டுபிடித்த போலீஸார், நேற்று அவரது மருத்துவமனை சென்று அவரை கைது செய்ததுடன் அவரின் காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.