கொரோனா ஊரடங்கில் பசியால் பரிதவிக்கும் குரங்குகளுக்கு, உணவு சமைத்து வாழை இலையில் பரிமாறி மக்கள் மகிழ்கின்றனர்.
கேரளாவில் கொரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் நோக்கில் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அது கடுமையாக அமலாக்கப்பட்டுள்ளது. அதனால், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பொது ஊரடங்கை ஒட்டி சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சுற்றுலா தலங்கள் மூடலால், சுற்றுலா தொடர்பான தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இந்நிலையில் இந்த கொரோனா ஊரடங்கால் மனிதர்கள் மட்டுமல்ல அவர்களை சார்ந்து வாழும் குரங்குகளும் பாதிப்படைந்துள்ளன.
தமிழக கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களான தேக்கடி, மூணாறுக்கு அடுத்து வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் ராமக்கல்மேடு பகுதியும் ஒன்று. இரு மாநில வனத்தை ஒட்டிய உயரமான பகுதியில் அமைந்துள்ள இந்த சுற்றுலா தலத்தில் எப்போதும் வீசும் காற்றை அனுபவிக்கவும், மலை உச்சியில் இருந்து தூரத்து அழகை ரசிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளோடு ஒன்றிய குரங்குகள், அவர்கள் விரும்பித் தரும் உணவை உண்டு பழகிவிட்டன. தற்போது சுற்றுலா தலங்கள் மூடலால் சுற்றுலா பயணிகள் வருகையின்றி உணவு கிடைக்காமல் குரங்குகள் பரிதவிக்க ஆரம்பித்து விட்டன. இதனால் அவைகள் உணவு தேடி ஊருக்குள் வர ஆரம்பித்துவிட்டன.
இதை உணர்ந்த ராமக்கல்மேடு பகுதி மக்கள் ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத்தினருக்கு சமைப்பது போல, தங்களால் முடிந்த அளவு உணவை குரங்குகளுக்காக கூடுதலாக சமைத்து, அதை விருந்தினர்களுக்கு வழங்குவது போல் வாழை இலையில் பறிமாறி மகிழ்கின்றனர். இவர்களுக்கு உறுதுணையாய் உள்ளூர் கொரோனா ஒழிப்பு கமிட்டி அங்கத்தினரும் இணைந்துள்ளனர். அனைத்து வீடுகளிலும் இந்த உணவு பறிமாற்றம் தொடர்ந்து நடப்பதால் குரங்குகள் வாயாற உண்டு பசியாறி மகிழ்கின்றன.