கேரள அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் சோலார் பேனல் ஊழல் புகார் தொடர்பாக எந்தவிதமான விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கேரளாவில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு சோலார் பேனல்கள் விற்பனை செய்ததில், தொழிலதிபர் சரிதா நாயர் மோசடி செய்ததாக கடந்த 2013ஆம் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் அன்றைய முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அளித்த அறிக்கையை நேற்று முதலமைச்சர் பினராயி விஜயன் கேரள சட்டசபையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் சோலார் பேனல் ஊழல் புகார் அறிக்கையை காங்கிரஸ் கட்சி முழுமையாக நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, காங்கிரஸ் தலைவர்கள் மீது ஆளும் இடதுசாரி அரசு திட்டமிட்டு தவறான மற்றும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாக தெரிவித்தார். என்றாலும், எந்தவிதமான விசாரணையையும் எதிர்கொள்ள தயார் என்றும், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறினார்.