தங்கக் கடத்தல் விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை அரசு காப்பாற்றாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கடந்த 5-ஆம் தேதி டிப்ளமாட்டிக் பார்சல் என்ற பெயரில் வந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் கேரள விமான நிலையத்தில் பிடிபட்டது. தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஸ்வப்னா கேரள முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள ஐடி பிரிவில் பணியாற்றுபவர் என்பதால் கேரள அரசியலில் முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருக்கடி முற்றியது.
இந்த தங்கக் கடத்தல் குறித்து தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. கேரள காவல்துறையும், சுங்கத்துறையும் ஸ்வப்னா சுரேஷை வலைவீசி தேடி, பெங்களூருவில் கைது செய்தனர். இந்நிலையில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை அரசு காப்பாற்றாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்
மேலும் தெரிவித்த அவர், ''தங்க கடத்தல் வழக்கில் முதலில் என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கி முடிவுகள் வரட்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை அரசு காப்பாற்றாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தங்க கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒரு பெண்மணி அரசுத்துறையில் பணியாற்றியது, அவர் போலிச் சான்று கொடுத்து பணியில் சேர்ந்தாரா என்பது குறித்து விசாரிக்க அரசு தலைமைச் செயலர் தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக அரசு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். என்.ஐ.ஏ., விசாரணைக்குப்பின், அரசு செயலாளர் மீது வேறு குற்றச்சாட்டுகள் இருந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு எப்படியாவது நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக கூறி வருகின்றன. முதலில் இந்த வழக்கை செய்திகளால் திசை திருப்பாமல் என்.ஐ.ஏ.,வை சுதந்திரமாக விசாரணை நடத்த அனுமதியுங்கள். அவர்களின் விசாரணைக்கு அரசு அனைத்து முழு ஒத்துழைப்பும் நல்கும்'' எனத் தெரிவித்துள்ளார்