கேரள மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இலவச கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கோவிட் -19 தடுப்பூசி மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று அறிவித்தார். "தடுப்பூசிக்கு யாரும் கட்டணம் வசூலிக்க மாட்டார்கள். இது அரசாங்கத்தின் நிலைப்பாடு" என்று கண்ணூரில் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறினார்.
தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஏற்கெனவே தங்கள் மாநிலங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவச கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில் கேரள முதல்வர் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா மற்றும் ஃபைசர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட மூன்று கோவிட் -19 தடுப்பூசிகள் இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் தீவிர பரிசீலனையில் உள்ளன. அனைவருக்கும் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு ஆரம்பகால உரிமம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் நேற்று 5,949 புதிய கோவிட் -19 பாதிப்புகள், 32 கொரோனா இறப்புகளும் பதிவாகியுள்ளன. இதுவரை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.64 லட்சமாகவும், பலி எண்ணிக்கை 2,595 ஆகவும் உள்ளது. சிகிச்சையின் உள்ளவர்களின் எண்ணிக்கை 60,029 ஆக உள்ளது. நேற்று 5,268 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.