கேரளாவில், தேவாலயம் ஒன்றில் குழந்தைகள் இரத்தத்தால் சத்தியம் என எழுதிய நிகழ்வு குறித்து அறிக்கை அளிக்குமாறு எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியருக்கு மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கேரளாவில் தேவாலயங்களை ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவ பிரிவினர் நிர்வகிக்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து ஜாகோபைட் கிறிஸ்தவ பிரிவினர் கடந்த சில நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கோத்தமங்கலம் என்ற ஊரில் உள்ள தேவாலயத்தில் ஜகோபைட்ஸ் திருச்சபைகளைச் சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் ஆள்காட்டி விரலைக்கீறி ரத்தத்தின் மூலம் சத்யம் என வெள்ளைத்தாளில் எழுதினர். ஜகோபைட்ஸ் பிரிவினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குழந்தைகள் இவ்வாறு எழுதினார்கள்.
இதுதொடர்பான செய்திகள் கேரள நாளேடுகளில் வெளியானதை அடுத்து, அம்மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம், நிகழ்வு குறித்து அறிக்கை அளிக்குமாறு எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட காவல் உயரதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.