விஷு பண்டிகை சிறப்பு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தமிழ் சித்திரை மாதம் மற்றும் மலையாள புத்தாண்டான விஷு சிறப்பு பூஜைகளுக்காக கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருன்றனர்.
இந்நிலையில், தமிழ் புத்தாண்டான சித்திரை மாத சிறப்பு பூஜைக்காக ஏப்ரல் 14 ஆம் தேதியான நேற்று சபரிமலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்து திரும்பினர்.
இந்நிலையில் ஏப்ரல் 15ஆம் தேதியான இன்று மலையாள புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, மேடம் மாத விஷு பண்டிகை விழா நடந்தது. இதற்காக சபரிமலை கோயில் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விஷு பண்டிகை விழாவிற்காக அதிகாலை 4:00 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
இதையடுத்து தினமும் முன்பதிவு செய்த 15 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்திருந்த நிலையில், விஷு பண்டிகை தரிசனத்திற்காக அதிகாலையில் இருந்து திரளான பக்தர்கள் நடை பந்தலில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலையில் பிரசாதம் மற்றும் சிறப்பு பூஜைக்கான கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும் சபரிமலை வழிபாட்டிலும் பிரசாதம் வாங்குவதிலும் பக்தர்கள் வழக்கம்போல் குவிந்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து வரும் 18 ஆம் தேதி வரை நடைதிறக்கப்பட்டு வழக்கமான சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற இருக்கின்றன.