தனிமைப்படுத்தப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் 8 அமைச்சர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் “நெகட்டிவ்” என வந்துள்ளது.
கோழிக்கோடு விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த மலப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் தொடர்பு பட்டிலில் வந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் மற்றும் அரசின் தமைமைச்செயலாளர், டி.ஜி.பி., ஆகியோரது கொரோனா பரிசோதனை முடிவுகள் “நெகட்டிவ்” ஆக வந்துள்ளது. ஆனாலும் கொரோனா விதிமுறைகளின்படி அவர்கள் அனைவரும் ஏழு நாள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கரிப்பூரில் உள்ள கோழிக்கோடு பன்னாட்டு விமான நிலையத்தில். துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளாகி 18 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து விபத்தில் மீட்பு பணி மற்றும் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட மலப்புரம் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள், மற்றும் பணியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் மலப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அப்துல்கரீம், அதற்கடுத்த நாள் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆட்சியர், துணை ஆட்சியர் உள்ளிட்ட 21 அதிகாரிகளுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களின் தொடர்பு பட்டியலும் தயாரிக்கப்பட்டது.
அந்த பட்டியலில் விமான விபத்தை பார்வையிட சென்ற கேரள முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா மற்றும் ஜலீல், மொய்தீன், சந்திரசேகரன், ஜெயராஜன், சுனில்குமார், ராமச்சந்திரன், சசீந்திரன் ஆகிய எட்டு அமைச்சர்கள் மற்றும் கேரள அரசின் தலைமைச்செயலாளர் விஸ்வா மேத்தா, டி.ஜி.பி., லோக்நாத் பெக்ரா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் “நெகடிவ்” ஆக வந்துள்ளது. ஆனாலும் கேரள முதல்வரில் துவங்கி அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் கொரோனா விதிமுறைப்படி ஏழுநாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.