திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடும் மத்திய அரசின் முடிவு ஒருதலைபட்சமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் இதுகுறித்து விவாதிக்க இன்று மாலை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையம் உட்பட மூன்று விமான நிலையங்களை ஒரு தனியார் நிறுவனத்திடம் 50 ஆண்டுகளுக்கு ஒப்படைக்க மத்திய அரசு எடுத்த முடிவுக்கு கேரளா அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் “திருவனந்தபுரம் விமான நிலையத்தின் செயல்பாட்டிலும் நிர்வாகத்திலும் ஒரு தனியார் நிறுவனத்தினை ஈடுபடுத்துவது என்பது "மாநில அரசு அளித்த பங்களிப்புகளுக்கு காரணியாக இருக்கும் விமான நிலைய வளர்ச்சிக்கு 2003ஆம் ஆண்டு இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அளித்த உத்தரவாதத்திற்கு எதிரானது.
2005 ஆம் ஆண்டில் கேரள அரசு 23.57 ஏக்கர் நிலங்களை "இலவசமாக" இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு சர்வதேச முனையம் கட்டுவதற்காக வாங்கிக்கொடுத்தது. அந்த நிலத்தின் மதிப்பு என்பது மாநிலத்தின் பங்கு மூலதனமாக பிரதிபலிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்தான் அப்போது நிலம் அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது மத்திய அரசு ஒருதலை பட்சமாக முடிவினை எடுக்கிறது, இந்த முடிவுக்கு மாநில அரசு முழுமையாக ஒத்துழைக்காது” என்று தெரிவித்துள்ளார்
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி சசிதரூர், விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடும் முடிவை வரவேற்றுள்ளார். பாஜக எம்.பி முரளீதரனும் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.