திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது புதிய காருக்காக ரூ. 31 லட்சம் செலவு செய்து ஃபேன்ஷி நம்பர் ஒன்றை வாங்கியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கே.எஸ். பாலகோபால். இவர், போர்ஷே கார் நிறுவனத்தில் புதிதாக நீல நிறத்தில் ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை சமீபத்தில் வாங்கியுள்ளார். வெளிநாட்டிலிருந்து இந்த போர்ஷே 718 பாக்ஸ்டர் காரை இறக்குமதி செய்ய ரூ.1 கோடி செலவு செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தான் வாங்கியிருக்கும் புதிய ஸ்போர்ட்ஸ் காருக்கு ஃபேன்ஸி நம்பர் வாங்க பாலகோபால் திட்டமிட்டுள்ளார். அப்போது, கேரளாவின் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் ஃபேன்ஸி நம்பருக்கான ஏலம் நடைபெற்றது. 500 ரூபாயில் தொடங்கிய இந்த ஏலத்தின் முடிவில் 25 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் மூன்று பேர் இருந்தனர். அதில் 5 லட்சம் ரூபாயை திடீரென உயர்த்தி பாலகோபால், KL-01 CK-1 என்ற நம்பரை ரூ.31 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார். மேலும் KL-01CK-1 என்ற எண்ணை பதிவு செய்ய ரூ.1 லட்சம் செலவு செய்துள்ளார்.
இந்தியாவிலேயே ஃபேன்ஸி நம்பருக்காக பெரிய தொகையை செலவு செய்தது, பாலகோபால் தான் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுப்போன்று காருக்காக நம்பர் வாங்குவதில் கேரளாவில் பல சாதனைகளை பாலகோபால் செய்துள்ளார். அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு டொயாட்டோ லேண்ட் க்ரூஷியர் காருக்கு KL-01 CB-01 என்ற ஃபேன்ஸி எண்ணை வாங்குவதற்கு ரூ.19 லட்சம் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.