மரத்தைக் காணவில்லை என புகாரளித்த சிறுவன்.. வீடு தேடி வந்த மரக்கன்றுகள்..!

மரத்தைக் காணவில்லை என புகாரளித்த சிறுவன்.. வீடு தேடி வந்த மரக்கன்றுகள்..!
மரத்தைக் காணவில்லை என புகாரளித்த சிறுவன்.. வீடு தேடி வந்த மரக்கன்றுகள்..!
Published on

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவன் பவன் நாஸ். திங்கள் கிழமையன்று வீட்டுக்கு வந்த அவனுக்குப் பெரும் அதிர்ச்சி. அவன் வளர்ந்து வந்த மரத்தைக் காணவில்லை. இதுபற்றி காவல்துறையில் புகார் தெரிவித்த சிறுவனுக்குப் பரிசாக மரக்கன்றுகள் வழங்கிய சம்பவம் பலரையும் நெகிழவைத்திருக்கிறது. இதுபற்றிய செய்தியை தி நியூஸ்மினிட் இணையதளம் வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுவன் பவன், தன் வீட்டுக்கு முன்னால் பள்ளியில் இருந்து வாங்கிவந்த மரக்கன்றை வைத்து ஆசையுடன் வளர்ந்து வந்திருக்கிறான். இரண்டு அடி உயரமுள்ள அந்த மரத்தை யாரோ வெட்டிச் சென்றுவிட்டார்கள். சிறு பகுதியை மட்டுமே மிச்சம் வைத்திருந்தார்கள். தினமும் நீருற்றி வளர்த்த மரத்தை இழந்த சோகத்தை அவனால் தாங்கமுடியவில்லை.

ஆனால் அடுத்த நாளே, வீட்டின் முன்னால் இஞ்சரக்கல் காவல் நிலைய காவல்துறை அதிகாரிகளைப் பார்த்ததும் பெற்றோருக்கு ஆச்சரியம். அவர்கள் கையில் புதிய 9 மரக்கன்றுகள். மரத்தை இழந்த கவலையில் உள்ள சிறுவனைத் தேற்றுவதற்காக அவர்கள் வந்திருந்தார்கள். பெற்றோருக்குத் தெரியாமல் அவன் செய்த காரியம்தான் அதற்குக் காரணம்.

மனரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகளைத் தேற்றுவதற்காக கேரள அரசு, சிரி என்ற டெலிபோன் ஆலோசனை மையத்தைத் தொடங்கியுள்ளது. திங்களன்று அந்த உதவி எண்ணை அழைத்த பவன், எதுவும் பேசமுடியாமல் அழுதிருக்கிறான். தன்னுடைய மரத்தைக் காணவில்லை என்று புகார் செய்தான். பின்னர் இந்த தகவல் காவல்துறை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

கேரள காவல்துறை ஐஜி பி. விஜயன் உத்தரவின்பேரில், மரத்தை இழந்த சிறுவனுக்கு மரக்கன்றுகளை காவல்துறையினர் பரிசாக வழங்கி மகிழ்ந்துள்ளனர். மேலும், கொச்சியைச் சேர்ந்த ஸ்மார்ட் கார்டு என்ற தனியார் நிறுவனம், சிறுவனின் வீட்டில் இலவசமாக ஒரு சிசிடிவியையும் பொருத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com