கேரளத்தில் பெண்களை மதமாற்றம் செய்வதற்காக ‘லவ் ஜிகாத்’ நடத்தப்படுகிறது என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கத்தோலிக்க திருச்சபை பேராயர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சீரோ - மலபார் கத்தோலிக்க திருச்சபையின் பேராயரான மார் ஜோசப் கல்லாரங்கட், நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ''கேரளத்தில் கிறிஸ்தவ பெண்களை மதமாற்றம் செய்வதற்காக ‘லவ் ஜிகாத்’ நடத்தப்படுகிறது. இது தவிர போதைப் பொருள் பயன்பாட்டுக்கு அடிமைப்படுத்தி பெண்களை மூளைச் சலவை செய்கிறாா்கள். பயங்கரவாத செயல்கள் உள்ளிட்ட நாச வேலைகளுக்கும் நமது பெண்களைப் பயன்படுத்த முயலுகின்றனா். வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு நமது பெண்களை அனுப்புகிறாா்கள்’' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இவரது கருத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள், பாஜக தவிர்த்து அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மக்களிடையே மத வெறுப்புணர்வு தூண்டும் வகையில் பேசியதற்காக மார் ஜோசப் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் மார் ஜோசப் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, அகில இந்திய இமாம் கவுன்சில் சார்பில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மார் ஜோசப் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மார் ஜோசப் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குறவிலங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.