அதானி குழுமத்துக்கும், கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கும் இடையே தொடர்பிருப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் சந்தேகம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தை, அதானி நிறுவனத்திற்கு 50 ஆண்டுகளுக்கு வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு, கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவிற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக துணை நிற்கின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தினையும் அதானி குழுமத்துக்கு வழங்கும் முடிவினையும் கடுமையாக எதிர்க்கிறோம்.
ஆனால், அதானியின் நெருங்கிய உறவினர் நடத்தும் சட்ட நிறுவனமான சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனத்திடம் கேரள அரசு ஏலம் விவகாரத்தில் ஆலோசனை கேட்டுச் செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது.
இந்த சந்தேகம் உண்மையென்றால், அதானி குழுமத்துக்கும், கேரள அரசுக்கும் இடையிலான தொடர்பு இருப்பதாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
விமான நிலையத்தை ஏலம் எடுக்கும் போட்டியாளர்களில் கேரள அரசுடன் சேர்ந்து மிகப்பெரிய அதானி குழுமமும் போட்டியிட்டது. ஆனால், அதானி குழுமும், கேரள அரசும், தங்களின் சட்ட ஆலோசனையை ஒரே நிறுவனமான சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனத்திடம்தான் பெற்றுள்ளன.
ஏலத்தின் முடிவில், அதானி குழுமம் வென்றதாக வெளியான செய்தி, தீவிரமான சந்தேகங்களையும், நம்பகத்தன்மை ஆகிய கேள்விகளை எழுப்புகிறது.
இந்த முரண்பாடு இருக்கும் போது, எவ்வாறு அந்த சட்ட நிறுவனத்தை ஒப்பந்தம் செய்தது குறித்து ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு விளக்கமளித்து தெளிவுபடுத்த வேண்டும்.’’
இவ்வாறு சென்னிதலா தெரிவித்துள்ளார்.