கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட வழக்கில் கேரளாவைச் சேர்ந்த சீரியல் நடிகை கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் கொல்லத்தில் கள்ள நோட்டு புழக்கம் அதிகம் இருப்பதாக இடுக்கி மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து இடுக்கி மாவட்ட எஸ்.பி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லியோடாம், கிருஷ்ணகுமார், ரவிந்தீரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடமிருந்து இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கள்ள நோட்டு கும்பல் குறித்து வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து இடுக்கி மாவட்ட காவல்துறையினர் கொல்லம் விரைந்து மலையாள சீரியல் நடிகை சூர்யா வசித்து வந்த பங்களாவில் சோதனை செய்தனர்.
பங்களாவின் மாடியின் கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் ஒரு தனிப்பிரிவே இயங்கி வந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் நவீன வகை இயந்திரம், விலை உயர்ந்த காகித சுருள், புழக்கத்தில் விட தயாராக இருந்த 67 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக நடிகை சூர்யா, அவரது தாயார் மற்றும் தங்கையை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதுவரை அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்ட கள்ள நோட்டுகளின் விவரங்கள் குறித்து அறிய நடிகை உள்ளிட்ட மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக இடுக்கி மாவட்ட எஸ்.பி. வேணுகோபால் தெரிவித்தார்.