கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் குடும்பத் தகராறில் ஆறு வயது சிறுவன் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே அமைந்துள்ளது வெள்ளத்தூவல் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஆமைக்குண்டம் பகுதியில் வசிப்பவர்கள் ரியாஸ் மற்றும் சபியா தம்பதியினர். கூலித்தொழில் செய்யும் இந்த தம்பதியினருக்கும் சபியாவின் சகோதரி ஆஷ்மி மற்றும் அவரது கணவர் ஷான் என்பவருக்கும் சொத்து விஷயமாக நீண்ட நாட்களாக குடும்ப தகறாறு இருந்து வந்துள்ளது. இது குறித்து வெள்ளத்தூவல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
குடும்ப தகறாறு இருக்கும் நிலையில் ஆத்திரம் அடைந்த ஷான் இன்று அதிகாலை 3 மணிக்கு, சபியா வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.. கணவர் ரியாஸ் வீட்டில் இல்லாத நிலையில், சபியா கதவை திறக்க உள்ளே நுழைந்த ஷான் உறங்கி கொண்டிருந்த சபியா ரியாஸ் தம்பதியினரின் ஆறு வயது மகன் அப்துல் ரைஹான் தலையில் சுத்தியலால் அடித்ததாகவும் அதனால் அந்தச் சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது.
இதையடுத்து கதறித்துடித்த சபியாவிற்கும் சுத்தியல் அடி விழுந்ததாகவும், சபியாவின் தாயார் ஷைனஃபாவும் சுத்தியலால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சபியாவின் மூத்த மகளான 15 வயது ஆயிஷா நிகழ்வுகள் அறிந்து வீட்டிலிருந்து வெளியே தப்பி ஓடி கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். சுற்றத்தார் கூடியவுடன் ஷான் அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்து தகவல் தெரிவிக்க வெள்ளத்தூவல் போலீசார் நிகழ்விடம் வந்து இறந்த சிறுவனின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த சபியா மற்றும் அவரது தாயாரையும் மீட்டு, அடிமாலி தாலுகா மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வெள்ளத்தூவல் போலீஸார் சிறுவன்மை கொலை செய்து விட்டு தலைமறைவான ஷானை தேடி வருகின்றனர்.