கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கொடூரம்! 17 வயது சிறுமிக்கு 13 வயது முதல் தொடர் பாலியல் வன்கொடுமை
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு பகுதியை சேர்ந்த சிறுமி தனது 13வது வயதில் கடந்த 2016ஆம் ஆண்டு முதன்முறையாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அப்போது, 'சைல்ட் லைன்' தலையிட்டு, சைல்ட் லைன் வெல்ஃபேர் கமிட்டி'யில் சிறுமி ஒப்படைக்கப்பட்டார். சிறுமி காப்பகத்திற்கு மாற்றப்பட்டு சிகிச்சைக்குப்பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு சிறுமி தனது 14வது வயதில் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மீண்டும் காப்பகத்திற்கு மாற்றப்பட்டு சிகிச்சையும் மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டு, சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது 17 வயதாகும் சிறுமி மூன்றாவது முறையாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் போக்சோ சட்டப்படி 32 வழக்குகள் 44 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து பெருந்தன்மனா உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மூன்று ஆய்வாளர்கள், ஏழு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சிறுமியிடம் நடத்திய விசாரணையில் ஏழு முறை இதேபோன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் 'சைபர் குற்றங்கள்' ஏதேனும் உள்ளதா என ஆராயப்பட்டு வருகிறது. பரிச்சையம் இல்லாத முகம் தெரியாத பலரும் நண்பர்களால் அழைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
சிறுமி பயன்படுத்தி வந்த மொபைல் ஃபோன் தடயவியல் சோதனைக்கு அனுப்பபட்டுள்ளது. சைபர் செல் பிரிவினரும் விசாரணை களத்தில் உள்ளனர். தற்போது சிறுமிக்கு தொடர் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்குபின், சிறுமியின் மனநல ஆலோசனைக்குப்பின் புதிதாக வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளன. இதன் மூலம் புதிய தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது.
அதோடு சிறுமியின் மொபைல் ஃபோன் ஆய்வின் அடிப்படையில் அதில் கிடைக்கும் விபரங்கள் மூலமும் புதிய தகவல்கள் வெளிவர உள்ளன. சிறுமியுடன் பேசியது யார், யாரெல்லாம், என்ன பேசினார்கள், சிறுமியை புகைப்படம் எடுத்தோ, வீடியோக்கள் எடுத்தோ சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என மிரட்டினார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
அதோடு ஒரே சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய காரணம் என்ன, போலீஸார் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன், சிறுமியின் குடும்ப சூழல் என்ன என்பனவெல்லாம் கூட போலீஸ் விசாரணையில் உள்ளது.