பரோட்டா சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பரோட்டா சாப்பிட கடைக்கு சென்ற பாலாஜி என்ற இளைஞர் தொண்டையில் பரோட்டா சிக்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பரோட்டா சாப்பிட்டதால் தான் அவர் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள பூப்பாறை சூண்டலைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் கட்டப்பனா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு உரம் ஏற்றி வரும் லாரியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பல்வேறு இடங்களில் உரம் இறக்கிவிட்டு, தங்கியிருந்த இடத்திற்கு திரும்புவதற்கு முன் கட்டப்பனாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பரோட்டா பார்சல் வாங்கி வந்து லாரியில் அமர்ந்து சாப்பிட்டு இருக்கிறார் பாலாஜி. அப்போது பரோட்டா பாலாஜியின் தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் பாலாஜிக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடன் இருந்த லாரியில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்
ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பாலாஜியின் உடல், உடற்கூறு பரிசோதனைக்காக இடுக்கி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலாஜி பரோட்டா சாப்பிட்டுதான் தொண்டையில் அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா அல்லது உடல்நிலையில் அவருக்கு வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.