கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், ஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் புதிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. குழந்தையை முதலில் கண்ட வனத்துறை அலுவலர் பேய் என்று நினைத்து அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்த காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ராஜமலை 5-ஆம் மைல் சோதனைச்சாவடியில் வனத்துறையின் கண்காணிப்பு கேமிராவில், ஒரு ஜீப்பில் இருந்து ஏதோ ஒன்று கீழே விழுவது பதிவானது. ஆனால் அது குழந்தை என்று பின்னர் தெரியவந்தது. தவழ்ந்து வந்த அந்தக் குழந்தையை அன்றைய தினம் இரவு நேரப் பணியில் இருந்த வனத்துறை அலுவலர் கனகராஜ் முதலில் கண்டுள்ளார். அச்சத்துடனேயே குழந்தையை கண்ட கனகராஜ் அது பேய் என்று தவறாக எண்ணி ஓட்டம் பிடித்துள்ளார்.
பல வாகனங்கள் சென்ற பின்னரே குழந்தையை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மீட்டுள்ளார். இந்த தகவலை வனத்துறையினர் ரகசியமாக வைத்திருந்தது தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மாதம் 8-ஆம் தேதி நடந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு வெளியாகியுள்ளது.