ஹதியாவின் முடிவுகளில் தலையிடவோ, வற்புறுத்தவோ யாருக்கும் உரிமையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஹதியாவின் திருமணம் செல்லாது என்ற கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதங்களை எடுத்து வைத்தார். தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை, ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் கண்காணிப்பில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஹதியா திருமணம் தொடர்பான விசாரணை என்பது வேறு, நம் முன் உள்ள வழக்கு என்பது வேறு. ஹதியாவின் திருமணம் செல்லாது என அறிவிக்க அரசியலமைப்பு சட்டம் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கொடுத்துள்ளதா என்பதையே நாம் ஆய்வு செய்கிறோம் என்றனர்.
அப்போது ஆஜரான ஹதியா தந்தையின் வழக்கறிஞர், ஹதியாவை திருமணம் செய்ய அழைத்துச் சென்ற சூழ்நிலை குறித்தும் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், தான் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஹதியாதான் முடிவெடுக்க வேண்டும், அவரின் முடிவில் தலையிட நீதிமன்றம் யார், ஹதியா எங்கள் முன் ஆஜராகி, தனக்கு திருமணம் நடைபெற்றது என கூறும் போது , அதனை எப்படி செல்லாது என அறிவிக்க முடியும்? 24 வயதான ஹதியாவின் முடிவுகளில் தலையிடவோ, வற்புறுத்தவோ யாருக்கும் உரிமையில்லை. அப்பாவோடு செல்ல மாட்டேன் என ஹதியா கூறும்போது அவரை, ’இல்லை. நீ அப்பாவோடுதான் செல்ல வேண்டும்’ என அழுத்தம் தர முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினர்.
அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கலாம் என்று, தனது திருமணம் குறித்து பதிலளிக்க வழிசெய்யும் வகையில் ஹதியாவை மனுதாரராக சேர்த்து நோட்டீஸ் அனுப்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு விசாரணை பிப்ரவரி 22-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.