கேரளாவில் விழிஞத்தில் அதானி நிறுவனம் செயல்படுத்த உள்ள துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுப்புகளை உடைத்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
விழிஞம் துறைமுகத்தில், அதானி நிறுவனம் ₹7,525 கோடி மதிப்பிலான ஆழ்கடல், பல்நோக்கு, சர்வதேச துறைமுகம் மற்றும் கொள்கலன் மாற்று முனையத்தை செயல்படுத்த உள்ளது. விழிஞம் துறைமுக திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், கடற்கரை பகுதிகள் அலைகளால் அரிக்கப்படும் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து மீனவர்கள் 4ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டுமானம் நடந்து வரும் பகுதியில் காவல் துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 7 அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். கட்டுமானம் தொடங்கியபோது ஏக்கர் கணக்கில் கரையோர நிலங்கள் அழிக்கப்பட்டதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
இப்போராட்டத்திற்கு காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் அதில் பங்கேற்க போராட்டக்காரர்கள் முன்வரவில்லை என கேரள அரசு தெரிவித்துள்ளது.