சமூக வலைதளங்களில் சிறார் ஆபாச வீடியோக்களை பரப்பிய 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள காவல்துறையின் குழந்தை பாலியல் சுரண்டலுக்கு எதிரான பிரிவு (சி.சி.எஸ்.இ) அம்மாநிலத்தின் 21 இடங்களில் திடீரென அதிரடி சோதனை நடத்தியது. நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று காலை 1 மணிவரை நடைபெற்றது.
இந்த சோதனையில் மடிக்கணினிகள், மொபைல் ஃபோன் மோடம்ஸ், ஹார்டு டிஸ்க், மெமரி கார்டு, கணினிகள், மற்றும் சில மின்னணு சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 12 பேரை கைது செய்துள்ளனர்.
மின்னணு சாதனங்களை சோதனை செய்ததில் வாட்ஸ் ஆப்பில் சிறார் ஆபாச வீடியோக்களை பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சில வாட்ஸ் ஆப் குரூப்கள், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களை கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற பல சமூக ஊடகக் குழுக்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் மேலும் 126 பேர் சிறுவர் ஆபாச வீடியோக்களை பெருமளவில் விநியோகிப்பதில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
சிறார் ஆபாச வீடியோக்களை பார்ப்பது, விநியோகிப்பது அல்லது சேமிப்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். எனவே ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கக்கூடும் எனவும் போலீசார் எச்சரிக்கின்றனர். கேரளாவில் நடைபெற்ற மூன்றாவது சோதனை இதுவாகும். இதற்கு முன்பு இந்த வருடம் ஏப்ரல் மாதமும் ஜூன் மாதமும் ஏற்கெனவே இதுகுறித்த சோதனை நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.