அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி மீட்கப்பட்டு காசிரங்கா தேசிய பூங்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக பூங்காவுக்கு 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு கிடைத்துள்ளதுடன், வனவிலங்குகள் சுதந்திரமாக உலவுவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
காசிரங்கா தேசிய பூங்காவுக்கு கூடுதலாக வனப்பகுதி கிடைத்திருப்பதால் பூங்கா ஊழியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர் . இதற்கான அனுமதியை அஸ்ஸாம் மாநில அரசு, வியாழக்கிழமையன்று அளித்துள்ளது. ஏற்கெனவே பலமுறை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதிகள் மீட்கப்பட்டு பூங்காவுடன் சேர்க்கப்பட்டுள்ளன.
இங்குள்ள நாகான் மாவட்டம் தியோசூர், பால்ஹோவா பகுதிகளில் இருந்து ஏழாவது முறையாக 176 ஹெக்டேர் கிடைத்தது. எட்டாவது முறையாக பாந்தர்தூபி பகுதியில் இருந்து 307 ஹெக்டேரும், 9வது முறையாக சோனிட்பூர் மாவட்டத்தில் இருந்து 2.750 ஹெக்டேர் நிலமும் கைப்பற்றப்பட்டன.
கூடுதலாக வனப்பரப்பு கிடைத்துள்ளதால், புலிகள் போன்ற வனவிலங்குகள் காசிரங்கா பூங்காவில் சுதந்திரமாக உலவுகின்றன. இந்தப் பூங்காவில்தான் அரியவகை ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் இருக்கின்றன.