கவச் இருந்திருந்தால்.. ரயில் விபத்தைத் தடுத்திருக்கலாமா? உண்மையை விவரிக்கும் வீடியோ!

கவச் தொழில்நுட்பம் இருந்திருந்தால், இந்த விபத்தைத் தடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்படியான கவச் என்ன என்பது குறித்து இந்த வீடியோவில் அறிவோம்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று (ஜூன் 2) இரவு 7 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. அதேநேரம் ரயில் விபத்திற்கான காரணம் குறித்து அறியப்பட்டு வருகிறது.

இந்த ரயில் விபத்தில் தற்போது வரை 288 பேர் பலியாகி இருப்பதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், ரயில் விபத்து நடைபெற்ற ஒடிசா பாலசோர் பகுதிக்கு பிரதமர் மோடி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அதுபோல், ரயில் விபத்தில் காயமடைந்து கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் மோடி நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில், கவச் தொழில்நுட்பம் இருந்திருந்தால், நேற்று நடைபெற்ற ரயில் விபத்தைத் தடுத்திருக்க முடியும் எனப் பல தரப்பிலிருந்தும் வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆக, கவச் என்பது குறித்து இங்கு பார்ப்போம். ரயில்கள் மோதல் மூலம் விபத்து ஏற்படுவதை தடுக்க இந்திய ரயில்வே கவச் என்ற நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. அது குறித்து தற்போது பார்க்கலாம் லெவல் கிராசிங்குகள் அனைத்தையும் ஆள் உள்ளதாக மாற்றுதல், விபத்து பாதிப்புகளை குறைக்கும் LHB பெட்டி என பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் DRDO அமைப்பு ரயில் மோதல்களை தவிர்ப்பதற்கான கவச் என்ற அதிநவீன மின்னணு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

ரயில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி சென்றாலோ, சிக்னலை மீறிச் சென்றாலோ தானியங்கி முறையில் தாமாகவே பிரேக் போட்டு ரயிலை நிறுத்துவதே கவச் தொழில்நுட்பமாகும். இந்த கவச் தொழில்நுட்பம் கடந்தாண்டு மார்ச் மாதம் பரிசோதித்து பார்க்கப்பட்டது. முதலில் டெல்லி - மும்பை, டெல்லி - கொல்கத்தா பாதையில் ஓடும் ரயில்களில் இந்த வசதியை பொருத்த முடிவெடுக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக மற்ற பாதைகளிலும் இதை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடெங்கும் எல்லா ரயில்களிலும் இந்த வசதியை ஏற்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில்தான் ஒடிஷாவில் ரயில்கள் மோதி சோக நிகழ்வு நடந்துள்ளதுமேலும் இதுகுறித்து புதிய தலைமுறை ஊடக நெறியாளர் கார்த்திகேயன் தரும் விளக்கத்தையும் இந்த வீடியோவில் அறிவோம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com