கௌரவர்கள் அனைவரும் டெஸ்ட் ட்யூப் குழந்தைகள் என்றும், ராவணன் சில விமான நிலையங்களை வைத்திருந்தான் என்றும் ஆந்திர பல்கலைக்கழக துணை வேந்தர் பேசியுள்ளார்.
ராமாயணம், மகாபாரத கதைகளை அடிப்படையாக கொண்டு, அதில் வரும் சம்பவங்களை அறிவியலோடு தொடர்புபடுத்தி அவ்வவ்போது சிலர் பேசி வருகின்றனர். இலக்கியத்தில் வரும் புஷ்பக விமானத்தை வைத்து, விமான தொழில்நுட்பம் பன்னெடுங் காலத்திற்கு முன்பே இருந்ததாகவும் கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய அறிவியல் மாநாட்டில் இலக்கிய கதைகளை அறிவியலோடு ஒப்பிட்டு ஆந்திர பல்கலைக்கழக துணை வேந்தர் நாகேஸ்வர் ராவ் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏவுகணை பயன்படுத்தும் தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்துள்ளது. கடவுள் ராமர் அஸ்திரங்களை பயன்படுத்தினார். அவர் பயன்படுத்திய சுதர்சன் சக்ரா, எதிராளிகளின் இலக்கை தாக்கிவிட்டு திரும்பவும் வந்துவிடும். அதாவது ஏவுகணை தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு புதிதல்ல என்பதையே அது காட்டுகிறது.
ராவணனிடம் புஷ்பக விமானம் மட்டும் இருக்கவில்லை, 24 வகையான, வெவ்வேறு வடிவங்களை கொண்ட விமானங்கள் இருந்துள்ளது. இதற்காக இலங்கையில் சில விமான நிலையங்களையும் அவர் வைத்திருந்தார். அந்த விமான தளங்களை பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தினார் என்றே ராமாயணம் கூறுகின்றது.
கடவுள் விஷ்ணுவின் 10 அவதாரங்களும் சார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாடுகளை ஒத்ததுதான். தண்ணீரில் இருந்து முதல் உயிரனம் தோன்றியது என்பதை குறிக்கும் வகையில் மீன் அவதாரம் உள்ளது. அதேபோல் தான் ஒவ்வொரு அவதாரமும் பரிணாம வளர்ச்சியை குறிக்கிறது.
காந்தாரிக்கு எப்படி 100 குழந்தைகள் பிறந்தது என்பதை நினைத்து எல்லோரும் ஆச்சர்யப்படுகிறார்கள். ஆனால், யாரும் அதனை நம்ப மறுக்கிறார்கள். மனிதனுக்கு எப்படி இது சாத்தியம் ஆகும்?. ஒரு பெண் எப்படி தன்னுடைய வாழ்நாளில் 100 குழந்தைகளை பெற்றெடுக்க முடியும் என்கிறார்கள்.
ஆனால், தற்போது இருக்கும் டெஸ்ட் ட்யூப் குழந்தை முறையை நம்மால் நம்ப முடிகிறது. 100 கருமுட்டைகள் நூறு பானைகளில் வைக்கப்பட்டதாக மகாபாரதம் கூறுகின்றது. அவைகள் எல்லாம் டெஸ்ட் ட்யூப் குழந்தைகள் இல்லையா?. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஸ்டெம் செல் ஆராய்ச்சி இந்த நாட்டில் இருந்துள்ளது.