ஜம்மு காஷ்மீரில் சிறுமி கொலை வழக்கை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒரு சிறார் உள்பட 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு கத்துவா முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது.
ஜம்மு காஷ்மீரில் வழக்கு நடைபெற்றால் தங்களுக்கு நீதி கிடைக்காது என்பதால், விசாரணையை சண்டிகருக்கு மாற்ற வேண்டும் என சிறுமியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர். வழக்கினை சிபிஐக்கு மாற்ற முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் சாட்சிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு காஷ்மீர் அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.