சிறுமி வெளியிட்ட வீடியோவின் எதிரொலி - ஆன்லைன் வகுப்பிற்கு நேரக்கட்டுப்பாடு

சிறுமி வெளியிட்ட வீடியோவின் எதிரொலி - ஆன்லைன் வகுப்பிற்கு நேரக்கட்டுப்பாடு
சிறுமி வெளியிட்ட வீடியோவின் எதிரொலி - ஆன்லைன் வகுப்பிற்கு நேரக்கட்டுப்பாடு
Published on

ஆன்லைன் வகுப்புகளால் சிரமப்படுவதாக சிறுமி ஒருவர் வீடியோ வெளியிட்டதன் எதிரொலியாக, ஆன்லைன் வகுப்புகளுக்கு காஷ்மீர் நிர்வாகம் நேரக்கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

''எனது ஆன்லைன் வகுப்பு காலை பத்து மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடக்கிறது. ஆங்கிலம், கணிதம், உருது, சுற்றுச்சூழல், அறிவியல் பாடங்களும் பின்னர் கம்யூட்டர் வகுப்பும் தொடர்ந்து நடக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு அதிக வேலை இருக்கிறது. எதற்காக சின்னக் குழந்தைகள் அதிக வேலையை எதிர்கொள்ள வேண்டும். என்ன செய்வது மோடி ஐயா.!''

நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுவதாகவும், குழந்தைகளுக்கு அதிக வேலை கொடுப்பதாகவும் கூறி காஷ்மீரைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி மஹிருத் இர்ஃபான், பிரதமர் மோடியிடம் புகார் கூறும் காட்சிகள்தான் இது.

மழலைக் குரலில், தனது மன அழுத்ததை பதிவுசெய்த சிறுமியின் குமுறலைக் கேட்டு, 24 மணி நேரத்தில், ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை குறைத்துள்ளது காஷ்மீர் நிர்வாகம்.

கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டதால், ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வீட்டிலேயே இருக்கும் குழந்தைகள் எந்த அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர் என்பதை இந்த குழந்தையின் வீடியோ பிரதிபலித்துள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா, குழந்தைகளுக்கான பாடச்சுமையை குறைக்க 48 மணி நேரத்தில் கொள்கை வகுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து தினசரி ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில நிர்வாகம் வெளியிட்டது. தொடக்கக் கல்விக்கு முந்தைய வகுப்பு மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரமும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றரை மணி நேரமும் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3மணி நேரத்துக்கு மிகாமலும் வகுப்புகள் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

காஷ்மீர் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் ஆன்லைன் மூலமாக பாடம் கற்கும் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கு உந்துதலாக இருந்த மஹிரா இர்ஃபானுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com