எதிர்வரும் குஜராத், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காகவே, 'காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை பாஜக பயன்படுத்தி வருவதாக சிவசேனா கட்சி மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சிவசேனாவில் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் அவர் இன்று எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது:
“ 'காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவினரும் ஏகத்துக்கும் புகழ்ந்து வருகிறார்கள். காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்டுகள் கொல்லப்பட்டதையும், அவர்கள் வெளியேற்றப்பட்டதையும் பற்றி இந்த திரைப்படம் பேசுகிறது. இதை பார்க்கும் போது உண்மையிலேயே கஷ்டமாக உள்ளது. ஆனால், இந்த திரைப்படத்தில் பல விஷயங்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டிருக்கின்றன. அந்த சமயத்தில், காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய அராஜகங்களால் இந்து பண்டிட்டுகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. மாறாக, லட்சக்கணக்கான முஸ்லிம்களும், சீக்கியர்களும் பயங்கரவாதத்துக்கு இரையானார்கள்.
மேலும், இந்த பிரச்சினை நடக்கும் போது மத்தியில் பாஜக ஆதரவு பெற்ற அரசாங்கம் தான் இருந்தது. அதேபோல, காஷ்மீரிலும் பாஜகவை சேர்ந்தவர் தான் ஆளுநராக இருந்தார். இந்த விஷயங்கள் ஏன் திரைப்படத்தில் மறைக்கப்பட்டன? இந்து பண்டிட்டுகள் மீதான தாக்குதலுக்கு காஷ்மீர் அரசியல் கட்சிகளை குற்றம்சாட்டும் பாஜக, பிடிபி உடன் ஏன் கூட்டணி வைத்தது?
இந்து பண்டிட்டுகள் மீது பாஜகவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகும் கூட, அவர்களை மறு குடியமர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன்? ஏனெனில், இந்து பண்டிட்டுகளுக்கு நல்லது செய்வது பாஜகவின் நோக்கம் அல்ல. அவர்களை வைத்து அரசியல் செய்வது தான் அக்கட்சியின் நோக்கமாக இருக்கிறது. மேலும், வருகிற குஜராத், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காகவே 'காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை பாஜக பயன்படுத்தி வருகிறது”
இவ்வாறு அந்தக் கட்டுரையில் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.