காஷ்மீரில் குல்மார்க்கில் உள்ள உயரமான சுற்றுலா விடுதியின் மீது கேபிள் கார் விழுந்து நொறுங்கியதில் ஏழு பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள்.
காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் உள்ள கேபிள் கார் சேவை உலகின் இரண்டாவது உயரமான கேபிள் கார் சேவையாக கருதப்படுகிறது. காஷ்மீர் செல்லும் சுற்றுலா பயணிகளின் லிஸ்டில், கண்டிப்பாக கேபிள் காரில் பயணம் செய்ய வேண்டும் என்று இருக்கும் அளவிற்கு இந்த பயணம் சுவாரஸ்யமிக்கதாகும். பல அடி உயரத்தில் கேபிள் காரில் அமர்ந்தபடி காஷ்மீர் பனிமலைகளை ரசிப்பது யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் இந்த ரசனையே இப்போது 7பேருக்கு எமனாக மாறி விட்டது. பல அடி உயரத்தில் சென்றுக்கொண்டிருந்த கேபிள் கார் ஒன்று அறிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேரும், உள்ளூர்வாசிகள் 3பேரும் பலியாகினர். மலையில் இருந்த பிரபலமான சுற்றுலா விடுதி மீது இந்த கேபிள் கார் விழுந்துள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து மீதமுள்ள கேபிள் கார்களில் உள்ளவர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் கவனக்குறைவே இந்த விபத்திற்கு காரணம் என காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் கருத்தை பதிவு செய்துள்ள அவர், பலத்த காற்று வீசும்போது கேபிள் கார் சேவையை நிறுத்தி வைப்பதுதான் வழக்கம் என்றும், விதி மீறப்பட்டதாலே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.