காஷ்மீரில் செல்போன் சேவை இன்று மீண்டும் வழங்கப்பட இருக்கிறது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து, ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு கருதி, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொலைபேசி, செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. இப்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதால் இந்த சேவைகள் படிப்படியாகத் திரும்ப வழங்கப்பட்டு வருகின்றன. ஜம்மு பகுதியில் மட்டுமே இந்தச் சேவைகள் முற்றிலும் வழங்கப்பட்டிருந்தன. காஷ்மீரில், தொலைபேசி இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று மதியம் 12 மணிக்கு மேல், போஸ்ட்பெய்ட் செல்போன் சேவைகள் வழங்கப்பட இருக்கிறது. இத்தகவலை, மாநில அரசின் செய்தி தொடர்பாளரும், முதன்மை செயலாளருமான ரோகித் கன்சால் தெரிவித்துள்ளார்.
பிரீபெய்டு செல்போன் சேவைகள் மற்றும் இணையதள சேவைகள் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதாகவும் சுற்றுலா பயணிகளின் நலனுக்காக சுற்றுலா தலங்களில் இன்டர்நெட் மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.