ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வீரர் படுகாயமடைந்தார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியை பிடித்தது முதலாக, காஷ்மீரில் பல தீவிரவாத அமைப்புகள் மீண்டும் தங்கள் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளன. இதனால் அங்கு தீவிரவாத தாக்குதல் தற்போது அதிகரித்துள்ளது. இதனை தடுப்பதற்காக ராணுவத்தினரும், துணை ராணுவப் படையினரும் அங்கு அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்த மற்ற வீரர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வீரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. தப்பியோடிய தீவிரவாதிகளை பிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, இன்று காலை காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு வியாபாரிகள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.