கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக நீட்டித்து வந்த விஜயலட்சுமியின் மர்ம மரணமானது தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. என்ன நடந்தது பார்க்கலாம்.
ஆலப்புழாவை அடுத்து கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. விவாகரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் வாழும் இவர் அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். நவம்பர் 4ம் தேதி ஆம்பலப்புழாவுக்கு சென்ற விஜயலட்சுமி, வீடு திரும்பவில்லை என்று கூறப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் கருநாகப்பள்ளி போலிசில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து விஜயலட்சுமியை தேடும்பணித் தொடர்ந்தது.
இந்நிலையில், எர்ணாகுளம் டிப்போவில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில், விஜயலட்சுமியின் போன் பேருந்தில் இருந்ததாக தகவல் தெரிய வந்தது. போலிசார் விஜயலட்சுமியின் போனை கைப்பற்றி அதை சோதனை செய்தனர். இதில் விஜயலட்சுமி தொடர்ந்து ஜெயசந்திரன் என்பவருடன் பேசி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து ஜெயசந்திரன் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் த்ரிஷயம் பட பாணியில் ஜெயலட்சுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
குற்றம் நடந்தது எப்படி?
ஆம்பலப்புழா கரூர் புதுவால் பகுதியைச் சேர்ந்த மீனவரான ஜெயசந்திரன் தனது மனைவி சுனிமோள் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மீன் வியாபாரத்தில் ஜெயசந்திரனுக்கு விஜயலட்சுமியுடன் பண ரீதியாக பழக்கம் ஏற்பட்டு பின்னர் திருமணத்தை மீறிய உறவாக மாறியது.
சம்பவ தினத்தன்று சுனிமோளும் அவரது மகனும் வெளியூர் சென்ற சமயம் ஜெயசந்திரன் வீட்டிற்கு வந்த விஜயலட்சுமி, அவருடன் அப்பகுதியில் இருந்த கோவிலுக்கு சென்றுவிட்டு ஆம்பலப்புழாவில் இருந்த தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
ஜெயசந்திரனுக்கு விஜயலட்சுமி நடத்தையில் ஏற்கனவே சந்தேகம் இருந்த நிலையில், இது குறித்து விஜயலட்சுமியிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே.. கோபமடைந்த ஜெயசந்திரன் அங்கிருந்த அரிவாளால் ஜெயலட்சுமியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்தில் ஜெயலட்சுமி இறந்துள்ளார்.
இறந்த உடலை அப்புறப்படுத்த நினைத்த ஜெயசந்திரன், வீட்டின் பின்புறத்தில் இருந்த வயல்பகுதியில் இறந்த ஜெயலட்சுமியின் உடலைப்புதைத்துவிட்டு, அங்கு மூன்று தென்னை மரக்கன்றுகளை நடவு செய்து விட்டு ஓடும்பேருந்துஒன்றில் ஜெயலட்சுமியின் மொபைல் போனை போட்டுவிட்டு இவர் கருநாகப்பள்ளி திரும்பி வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக குற்றத்தை செய்தது யார் என்று தெரியாத நிலையில், ஜெயலட்சுமியின் போன் குற்றவாளியைக் காட்டிக்கொடுத்துள்ளது.