செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
ஆக்ஸ்பார்ட் தனியார் கல்லூரியில் வார்டனாக பணிபுரிந்து வருபவர் ஜீவன். இவர், தனது தலையில் தக்காளி சாறு ஊற்றிக் கொண்டு அதை செல்போனில் படமெடுத்து, அதே கல்லூரியில் பணிபுரிந்து வரும் அவருடைய சித்தி சுனந்தாவிற்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து சித்திக்கு போன் செய்த ஜீவன், தான் கடத்தப்பட்டதாகவும் பணத்திற்காக என்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி 20 ஆயிரம் ரூபாய் தனது அக்கவுண்டில் பெற்றுள்ளார்.
இதையடுத்து பதறிப்போன ஜீவனின் சித்தி, உடனே பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், உடனடியாக ஜீவனை தேடும் பணியை துரிதப்படுத்தி, ஜீவனை மீட்டுக் கொண்டு வந்தனர். இதையடுத்து ஜீவனிடம் விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பணத்திற்காக தன் நண்பர்களுடன் சேர்ந்து ஜீவன், தான் கடத்தப்பட்டதாக தானே நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.
ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாட பணம் இல்லாததால் நண்பர்களுடன் சேர்ந்து தான் கடத்தப்பட்டதாக நாடகமாடி, ஆனேகல் பிங்கிபுரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதையடுத்து ஜீவன், அவருடைய நண்பர்கள் வினய், பூர்ணேஷ், பிரித்தம் மற்றும் ராஜு ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்