‘இந்த நேரத்திலும் தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்த சொல்கிறார்கள்..’: கர்நாடக மக்கள் வேதனை

‘இந்த நேரத்திலும் தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்த சொல்கிறார்கள்..’: கர்நாடக மக்கள் வேதனை

‘இந்த நேரத்திலும் தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்த சொல்கிறார்கள்..’: கர்நாடக மக்கள் வேதனை
Published on

பள்ளிக் கட்டணங்களை உடனடியாக கட்டச் சொல்லி நிர்ப்பந்திக்கும் கல்வி நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று கர்நாடக கல்வி அமைச்சர் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவிற்காகத் தன்னை மன்னித்து விடும்படியும் இதனைத் தவிர வேறு வழியில்லை எனவும் கூறியிருந்தார். ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கப்பட உள்ளதாகத் தகவல் பரவியது. ஆனால் அதற்கான திட்டம் இல்லை என மத்திய அரசு தெளிவாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் , 2020-21 கல்வியாண்டிற்கான மாணவர்களிடமிருந்து கட்டணம் மற்றும் நன்கொடைகளை (donation) வசூலிப்பதாகப் புகார்கள் வெளியானது. மக்கள் எங்கும் வெளியே செல்ல முடியாமல் முடங்கிப் போய் உள்ள இந்த நேரத்தில் இப்படி நடந்து கொள்ளும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிகை வலுத்தது. இதனிடையே அந்த மாநிலத்தில் கல்வி அமைச்சர் சுரேஷ்குமார், கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இந்த உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கிரிமினல் வழக்குகள் பாயும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர், "சில தனியார் கல்வி நிறுவனங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குள் கட்டணங்களைக் கட்ட சொல்லி வலியுறுத்துகின்றன. மேலும் எஸ்எம்எஸ் மூலம் பெற்றோருக்கு நினைவூட்டல் செய்திகளையும் அனுப்புகின்றன. தாமதமாகப் பணம் செலுத்துவதினால் அபராதங்களை விதிக்க உள்ளதாக எச்சரிக்கின்றன. ஆகவே பொது அறிவுறுத்தல் துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ஒரே பள்ளியில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு 2020-21 ஆண்டுக்கான கட்டணத்தைக் கட்டும்படி அடுத்த உத்தரவு வரை வற்புறுத்தக் கூடாது” என்று கூறியுள்ளார்.

மேலும், "அரசாங்க உத்தரவை மீறும் நிறுவனத்தின் மீது கல்விச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும். அல்லது நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்தல், தொற்று நோய்கள் சட்டம் 1887 மற்றும் சிஆர்பிசி ஆகியவற்றின் கீழ் கிரிமினல் வழக்கு தொடரப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே காலக்கெடுவை அறிவித்த பள்ளிகளைப் பொறுத்தவரை, அரசின் அடுத்த அரசாங்க உத்தரவு வரை அவர்கள் அனுப்பிய சுற்றறிக்கைகளை வாபஸ் பெற்று நிறுத்தி வைக்க வேண்டும் என்றார். மேலும் கட்டணம் செலுத்துவதற்கான புதிய தேதியை விரைவில் அரசாங்கம் அறிவிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.  

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com