கர்நாடகாவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான சிவகுமார் தனக்கு 618 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடகாவின் எரிசக்தி துறை அமைச்சர் சிவகுமார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் கனகபூரா தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனக்கும் தனது மனைவிக்கும் சேர்த்து மொத்தமாக 730 கோடி ரூபாய்க்கு சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். தொழில் பிரிவில் கல்வியாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டுள்ள சிவகுமார் மனைவி இல்லத்தரசியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு 618 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், தனது மனைவியான உஷாவிற்கு 112 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் ஷவகுமார் தனது பிரமாணப் பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு தேர்தலின்போது சிவகுமார் தாக்கல் செய்த சொத்துகளின் மதிப்பு 215 கோடி ரூபாய் ஆகும். கிட்டத்தட்ட 5 ஆண்டு காலத்தில் அவரின் சொத்துகள் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. மூன்று குழந்தைகள் இந்த தம்பதிக்கு இருக்கும் நிலையில் 1 மகளுக்கு மட்டும் சொத்துகள் இருப்பதாக சிவகுமார் தெரிவித்துள்ளார். தனது மகளான ஐஸ்வர்யாவுக்கு 108 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ 1.09 கோடி ஆகும். இந்நிலையில் தற்போது அந்த சொத்து பல மடங்காக உயர்ந்துள்ளது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் எந்தவொரு குற்றத்திலும் தான் சிக்கவில்லை எனவும் சிவகுமார் கூறியுள்ளார்.