காவிரி நீரைப் பங்கீடு செய்து கொள்வதில் பருவமழையால் சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர்,
கபினி, ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட முக்கிய அணைகளில் நீரின் இருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கபினி
அணையிலிருந்து தமிழகத்திற்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு, அது மேட்டூர் அணையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.
கிருஷ்ணராஜசாகர் அணையிலும் நீர்வரத்து உயர்ந்துள்ளதால் காரணத்தால், அதிலிருந்தும் கூடுதலாக தமிழகத்திற்கு தண்ணீர்
திறக்கப்படலாம். இதன்மூலம் மேட்டூர் அணையின் நீட்மட்டம் மேலும் உயரும். நீர்மட்டம் உயர்வின் அடிப்படையில் தமிழக டெல்டா
பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இதனால் தமிழக டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கபினி அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டது தொடர்பாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம்
செய்ய வந்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “கர்நாடகாவில் உள்ள அணைகளின்
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து, நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று கர்நாடகப் பாசனத்துறை அதிகாரிகளை
அழைத்து, கபினி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டு உள்ளேன். 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
பருவமழையால் இந்த நிலை தொடரும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. பருவமழையின் காரணமாக, காவிரி நதிநீர்ப் பங்கீட்டுக்
குழுவில் சொல்லப்பட்டுள்ளபடி ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய 10 டிஎம்சி நீரைத் தருவதில் பிரச்னை வர வாய்ப்பு
இல்லை. கடவுள் அருளால் இரு மாநிலங்களும் காவிரி நீரைப் பங்கீட்டுக் கொள்வதில், இந்தப் பருவமழை சுமூகமான நிலையை
ஏற்படுத்தி இருக்கிறது” என்றார்.