கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பரடனபுரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மகாதேவசாமி (45) - அனிதா (38) தம்பதியர் இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், சந்திரகலா (17), தனலட்சுமி (15) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், மைசூரு ஆர்.எம்.சி.யார்டு பகுதியில் கடை வைத்து நடத்தி வந்த மகாதேவசாமி, தனது குடும்பத்தினருடன் கிருஷ்ணராஜா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சாமுண்டிபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மகாதேவசாமி வீட்டிலிருந்து யாரும் வெளியே வராத நிலையில், வீட்டினுள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் கதவை தட்டி திறக்கும்படி கூறினார். ஆனால், உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணராஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு 4 பேரும் சடலமாக கிடந்துள்ளனர். இதையடுத்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மைசூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் விசாரணை நடத்தினார்.
முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் 4 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூரு நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.