கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது மனைவி பவித்ரா கவுடா உள்ளிட்டவர்களுடன் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக போலீசார் நடத்திவரும் விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்தப்படி உள்ளன.
இந்த நிலையில், நடிகர் தர்ஷனின் பண்ணை இல்ல மேலாளர் தற்கொலை செய்துகொண்டிருக்கும் வழக்கை, போலீசார் தற்போது கையில் எடுத்திருப்பது தர்ஷனுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவின் பெங்களூரு ஆனேகல் அருகே உள்ள துர்கா பண்ணை வீட்டைக் கவனித்து வந்தவர் மேலாளரான ஸ்ரீதர். இவர், தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இவரது உடல், பண்ணை வீட்டுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது இந்த வழக்கை போலீசார் மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.
தற்கொலை செய்வதற்கு முன்னதாக ஸ்ரீதர், வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ”தீவிர தனிமை காரணமாக தனது வாழ்க்கையை முடிக்க செய்துள்ளேன். ஆகையால், இந்த வழக்கில் தனது அன்புக்குரியவர்களை ஈடுபடுத்த வேண்டாம். என்னுடைய மரணத்திற்கு நான் மட்டுமே காரணம்” என அதில் தெரிவித்திருந்தார்.
இந்த தற்கொலைக்கும் தர்ஷன் சிக்கிய ரேணுகா ஸ்வாமி கொலை வழக்கிற்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆகையால் இதுகுறித்தும் அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். முன்னதாக, தர்ஷனின் மற்றொரு மேலாளரான மல்லிகார்ஜுன் 2018 முதல் காணாமல் போனது தொடர்பான விசாரணைகளுக்கு மத்தியில் இந்த வழக்கும் சூடு பிடித்துள்ளது. அதாவது, மல்லிகார்ஜுனனுக்கும் ரேணுகாசாமியைப்போல் ஏதாவது விபரீதமான சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது, நடிகர் தர்ஷனுக்கு புதிய தலைவலியை உண்டாக்கியுள்ளது.