பெங்களூருவில் நடந்த கலவரம் திட்டமிட்ட சதி என்று கர்நாடக மாநில அமைச்சர் சி.டி. ரவி குற்றஞ்சாட்டி உள்ளார்.
பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உறவினர் ஒருவர், குறிப்பிட்ட மதத்தை விமர்சித்து பதிவிட்ட சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவால், அப்பகுதியில் கலவரம் வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து கர்நாடகா மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சி டி ரவி, கூறும்போது,’’ இது ஒரு திட்டமிட்ட கலவரம். சோஷியல் மீடியாவில் பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சுமார் 300 வாகனங்கள் மற்றும் எம்.எல்.ஏ.வின் இல்லத்தை சேதப்படுத்தினர்.
கலவரம் தொடர்பாக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். எஸ்.டி.பி.ஐ இதற்கு பின்னால் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சர்ச்சைக்குரிய பதிவினையிட்ட நவீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை இந்த கலவரத்தில் ஈடுபட்ட 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.