9.55 நொடிகளில் 100மீ - உசைன் போல்டின் வேகத்தை மிஞ்சினாரா கர்நாடக இளைஞர்?

9.55 நொடிகளில் 100மீ - உசைன் போல்டின் வேகத்தை மிஞ்சினாரா கர்நாடக இளைஞர்?
9.55 நொடிகளில் 100மீ - உசைன் போல்டின் வேகத்தை மிஞ்சினாரா கர்நாடக இளைஞர்?
Published on

ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்டை மின்னல் மனிதன் என்று அழைப்பார்கள். ஓட்டப் பந்தயத்தில் உலக சாதனைகளை படைத்து அதனை மீண்டும் அவரே முறியடித்துக்கொண்டு இருப்பவர். தான் பங்கேற்கும் போட்டிகளில் வெற்றிகளை குவிக்கும் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட்டுக்கு உலகெங்கும் ரசிகர்கள் உண்டு. இவர் 100 மீட்டர் தூரத்தை 9.58 நொடிகளில் ஓடி உலக சாதனை படைத்திருக்கிறார்.

ஓட்டப்பந்தய போட்டிகளில் இந்த மின்னல் மனிதனை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. ஆனால் கர்நாடகாவில் நடந்த விழா ஒன்றில் ஒரு உள்ளூர் வீரன் உசைன் போல்டின் சாதனையை முறியடித்துள்ளதாக இணையவாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுபோல கர்நாடகாவில் எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம். கம்பாளா என்ற அந்த ஓட்டப்பந்தயத்தில் கிட்டத்தட்ட 143 மீட்டர் தூரத்தை தனது எருதுகளுடன் ஒரு வீரர் கடக்க வேண்டும். ஓடக்கூடிய ஓடுதளம் சாதாரணமாக இருக்காது. தண்ணீர் ஊற்றப்பட்டு சேறும் சகதியுமாக இருக்கும். தங்கள் மாடுகளை முன்னே ஓடவிட்டவாறு கயிற்றை பிடித்துக்கொண்டு வீரரும் பின்னே ஓட வேண்டும். இந்த போட்டியில் கலந்துகொண்ட வீரரான ஸ்ரீனிவாசகவுடா, 142.5 மீட்டரை வெறும் 13.62 நொடிகளில் ஓடிக்கடந்து வெற்றி பெற்றார்.

கம்பாளா விழாவில் சாதனை படைத்த ஸ்ரீனிவாசகவுடாவின் வேகத்தை சிலர் உசைன் போல்டின் சாதனையோடு ஒப்பிட்டு பார்த்தனர். அப்படியானால் ஸ்ரீனிவாசகவுடா 100 மீட்டரை 9.55 நொடிகளில் கடந்திருக்கிறார் எனக் கணக்கிட்டவர்கள், இது உசைன் போல்டின் சாதனையை முறியடித்த கணக்குதான் என்று தெரிவித்துள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் இது போன்ற வீரர்களை அரசு கவனத்தில் எடுத்து சரியான பயிற்சி வழங்கினால் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் இந்தியா பதக்கங்களை குவிக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, மாடுகளின் வேகத்தால் பின்னால் ஓடுபவரின் வேகம் உந்தப்படுகிறது என்றும் மாடுகளோடு சேர்ந்து ஓடுவதும், களத்தில் தனியாக ஓடுவதும் ஒன்றல்ல என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இருவேறுபட்ட சூழல் என்பதால் இரண்டையும் இணைத்துப் பார்க்கக்கூடாது என்றும் கருத்து பதிவிட்டுள்ளனர். எதுவாக இருந்தாலும் ஸ்ரீனிவாசகவுடா தன் ஓட்டத்தில் ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தியா முழுவதும் வைரலாகியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், எனக்கு கம்பாளா ரொம்ப பிடிக்கும். இந்தப் பெருமை எல்லாம் என் மாடுகளையேச் சேரும். அவை வேகமாக ஓடியதால் தான் நான் ஓடினேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com