சீட் பிரச்னையால் பூதாகரமாகும் உட்கட்சி பூசல்; கர்நாடக பாஜகவில் வெடிக்கும் போராட்டம்.. நடப்பது என்ன?

கர்நாடகாவில் 12 பாஜக வேட்பாளர்கள் தொகுதிகளில் உட்கட்சி பூசல் நிலவுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கர்நாட்கா, பாஜக
கர்நாட்கா, பாஜகட்விட்டர்
Published on

கர்நாடகாவில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு! உட்கட்சிப் பூசலில் பாஜக!

நாடு முழுவதும் ஜனநாயகப் பெருவிழா சூடு பிடித்திருக்கும் நிலையில், கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றன. அதேநேரத்தில், கட்சிகள் சீட் வழங்காத நிலையில், நிர்வாகிகள் பலர் வேறு கட்சிகளுக்கும் தாவி வருகின்றனர். வேறு சிலர், தமக்கு சீட் வழங்கப்படாதபோதும் சுயேட்சையாக நின்று போட்டியிட முடிவு செய்துள்ளனர். அப்படியான உட்கட்சி மோதல்தான் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் அரங்கேறி வருகிறது.

எடியூரப்பா, ஈஸ்வரப்பா
எடியூரப்பா, ஈஸ்வரப்பா

கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும் 2வது கட்டமாக மே 7ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அந்த வகையில், முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக தலைமை கடந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டது.

அதில் ஹாவேரி தொகுதியில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை போட்டியிடுகிறார். ஷிவமோகா தொகுதியில் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா போட்டியிடுகிறார். ஆனால், இந்தத் தொகுதியில் தனது மகன் கே.இ.காந்தேஷ் போட்டியிட கர்நாடக முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், பாஜக காந்தேஷுக்கு சீட் தர மறுத்துள்ளது. இதனால், பாஜகவை எதிர்த்து ஈஸ்வரப்பாவே களமிறங்க முடிவு செய்துள்ளார்.

இதன் காரணமாக, பாஜகவில் உட்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ”இந்தப் போராட்டம் எடியூரப்பாவுக்கும் எனக்குமானது; தவிர, என் மகனுக்குச் சீட் கிடைக்காமல் இருக்க காரணமாக இருந்தவர் எடியூரப்பாதான்” என ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ’என் புருஷனை கொன்றால் ஸ்பாட்டிலேயே ரூ.50 ஆயிரம்’ - ஸ்டேட்டஸ் வைத்த மனைவி.. பதறியோடிய கணவர்!

கர்நாட்கா, பாஜக
பாஜக - மஜத தொகுதிப் பங்கீடு: மறுப்பு தெரிவித்த குமாரசாமி!

எடியூரப்பா மகனை எதிர்த்துக் களம் காணும்  ஈஸ்வரப்பா

எடியூரப்பா மற்றும் அவரது மகன் பி.ஒய்.ராகவேந்திராவின் கோட்டையாக ஷிவமொக்கா விளங்கிவருகிறது. கடந்த 2009 முதல் அவர்கள் வெற்றிபெற்று வருகின்றனர். அதேநேரத்தில், இதே தொகுதியில் குருபா இனத்தைச் சேர்ந்த ஈஸ்வரப்பா 5 முறை வெற்றி பெற்றுள்ளார். இதே தொகுதியில் தற்போது காங்கிரஸ் கீதா சிவராஜ்குமாரைக் களமிறக்கியுள்ளது. இவர் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியும், மறைந்த முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகளும் ஆவார். இதற்கிடையே ஈஸ்வரப்பா இந்த தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டால் இன்னும் பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்த தொகுதி விஷயத்தில் பாஜகவுக்குள் உட்கட்சி பிரச்னை ஏற்பட்டிருப்பதால் காங்கிரஸ் சுலபமாக ஜெயித்துவிடும் எனக் கூறப்படுகிறது.

ஷோபா கரந்தலாஜே, சதானந்தா கவுடா
ஷோபா கரந்தலாஜே, சதானந்தா கவுடா

மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவை எதிர்க்கும் சதானந்தா கவுடா

அதேநேரத்தில், ’இந்த ஒரு தொகுதியில் மட்டும் பிரச்னையில்லை; இன்னும் பல இடங்களில் அதிருப்தி நிலவுகிறது’ என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரு வடக்குத் தொகுதியில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே களமிறக்கப்பட்டு உள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹோட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களைத் தொடர்படுத்தி கருத்து தெரிவித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு எதிராக முன்னாள் முதல்வர் சதானந்தா கவுடா கொடிபிடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. காரணம், இந்தத் தொகுதிக்கு அவர் சீட் கேட்டிருந்தார். ஆனால், தலைமை இவருக்கு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் இருந்த அவர், ஒருகட்டத்தில் அரசியலில் இருந்து விலகுவதாகக் கூறியிருந்தார். ஆனால், மூத்த தலைவர்களின் சமரசத்திற்குப் பிறகு அதிலிருந்து மாறிய சதானந்தா, தற்போது ஷோபாவுக்கு எதிராக கொடிபிடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பரிசோதனைக்குச் சென்ற 4 மாத கர்ப்பிணி.. மொழி புரியாமல் கருக்கலைப்பு செய்த மருத்துவமனை!

கர்நாட்கா, பாஜக
’குண்டுவைப்பவர்கள் தமிழர்களா..’ மத்திய இணை அமைச்சர் சர்ச்சை பேச்சு - தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்!

அண்ணாமலையின் நண்பர் சி.டி.ரவியும் எதிர்ப்பு

அடுத்து, பெல்காம் தொகுதியில், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அங்கேயும் உட்கட்சி பிரச்னை வெடித்துள்ளது. அதுபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான சி.டி.ரவி சிக்கமங்களூருவில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு சீட் தராததால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதுபோல் மைசூருவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரதாப் சின்ஹாவும் அதிருப்தி களத்தில் குதித்துள்ளார். மேலும், தாவங்கரே, சிக்கபள்ளாப்பூர், கொப்பல், தும்கூர், பிதார், ராய்ச்சூர், சித்ரதுர்கா உள்ளிட்ட 12 தொகுதிகளிலும் உட்கட்சிப் பூசல் உச்சமடைந்துள்ளதால் பெங்களூரு பிரசாரத்துக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அதிருப்தி பாஜக தலைவர்களை நேரில் அழைத்து சமரச பேச்சு நடத்த அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.

சி.டி.ரவி, பிரதாப் சின்ஹா
சி.டி.ரவி, பிரதாப் சின்ஹா

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளில் பாஜக 25 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், சுயேட்சை ஆகிய வேட்பாளர்கள் தலா 1 இடங்களில் வெற்றிபெற்றனர். சுயேட்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதாவும் வெற்றி பெற்றிருந்தார். இந்த சுமலதாகூட, தற்போது பாஜகவின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தார். அதனால் இந்த முறையும் மாண்டியாவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என நினைதார். ஆனால், பாஜகவோ தன்னுடைய கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு ஒதுக்கியுள்ளது. இந்த தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி களமிறங்குகிறார்.

இதையும் படிக்க: ’இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம்’ - எதிர்க்கட்சி தீவிர பிரசாரம்.. பதிலடி கொடுத்த வங்கதேச பிரதமர்!

கர்நாட்கா, பாஜக
மாண்டியாவில் களமிறக்கப்பட்ட குமாரசாமி; பாஜக கைவிட்டதால் கடும் அதிருப்தியில் சுயேட்சை எம்.பி சுமலதா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com