கர்நாடகாவில் நடந்த ஒரு கொலை சம்பவத்தில் நீதிபதி 13 நாட்களிலேயே தீர்ப்பு வழங்கியுள்ளார். நீதிபதி விரைவில் தீர்ப்பு வழங்க காரணமாக இருந்தது ஒரு மூன்று வயது குழந்தையின் சாட்சியம்தான்.
கர்நாடகாவை சேர்ந்த தொழிலாளி ஸ்ரீதர். 35 வயதாகும் இவருக்கு ஜக்கம்மா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே கடந்த சில மாதங்களாக ஜக்கம்மாவின் நடத்தையில் ஸ்ரீதருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஜக்கம்மாவை கொலை செய்ய திட்டமிருக்கிறார் ஸ்ரீதர். அதன்படி கடந்த ஜூன் 27-ஆம் தேதி இரவு தனது மனைவியான ஜக்கம்மாவை கொலை செய்தார் ஸ்ரீதர். அந்த நேரத்தில் அவர்களின் 1 வயது குழந்தை தூங்கிக் கொண்டிருந்துள்ளது. ஆனால் மூன்று வயது மகன், நடந்ததை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். பின்னர் உடனடியாக அருகிலுள்ள அத்தையின் வீட்டிற்கு சென்று அதுகுறித்து சொல்லியுள்ளார். அதன்பேரில் அவர்கள் ஸ்ரீதர் வீட்டிற்கு வந்தபோது, ஜக்கம்மா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அத்தோடு ஸ்ரீதர் மீது குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, கொல்லப்பட்ட ஜக்கம்மாவின் 3 வயது மகனும், தந்தையும் நீதிமன்றத்தில் ஆஜரானர். அப்போது தந்தையை பார்த்து அழுத முகத்தோடு அந்த 3 வயது குழந்தை, “ ஏன் அம்மாவை கொன்றாய்” என கேட்டுள்ளது. இதனையே முக்கிய சாட்சியாக கருதிய நீதிபதி, குற்றவாளிக்கு ஆயுள் தண்டவை வழங்கி உத்தரவிட்டார். குற்றச்சம்பவம் நடைபெற்ற 13 நாட்களிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சித்ராதுர்கா மாவட்ட முதன்மை மற்றும் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி எஸ்.பி.வஸ்திரமுத் தான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
நீதிபதி எஸ்.பி.வஸ்திரமுத் குறைந்த நாட்களில் தீர்ப்பு வழங்குவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன் நீதித்துறை வரலாற்றிலேயே மிகக் குறைந்த நாளில் அதாவது குற்றச்சம்பவம் நடந்து 11 நாளில் தீர்ப்பு வழங்கினார். 63 வயது மனைவியை கொன்ற 75 வயது முதியவர் கொன்ற வழக்கில் வெறும் 11 நாட்களில் தீர்ப்பு வழங்கி அசத்தியிருந்தார்.