மேகதாது அணைக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு முனைப்பாக உள்ளது. மேகதாது அணையால் தமிழ்நாட்டில் விவசாயம் பாதிக்கும் என்பதால் அத்திட்டத்தை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை இதுகுறித்து பேட்டியளித்திருக்கிறார். அதில், ‘’மேகதாதுவில் அணைகட்ட உச்ச நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை; குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடந்துள்ளது. எனவே கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும். மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை. பிரச்னைகளை காவிரி தீர்ப்பாயம் தீர்த்து வைத்ததால் மேகதாது அணையை நிறுத்த எந்தக் காரணமும் இல்லை’’ என தெரிவித்திருக்கிறார்.