‘சுய மரியாதைக்கு எதிரானது’ - ஹிஜாப் அணிய தடை விதித்ததால் வேலையை தூக்கி எறிந்த பேராசிரியை

‘சுய மரியாதைக்கு எதிரானது’ - ஹிஜாப் அணிய தடை விதித்ததால் வேலையை தூக்கி எறிந்த பேராசிரியை
‘சுய மரியாதைக்கு எதிரானது’ - ஹிஜாப் அணிய தடை விதித்ததால் வேலையை தூக்கி எறிந்த பேராசிரியை
Published on

கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணியக் கூடாது என்று கூறியதால், கர்நாடகாவில் தனியார் கல்லூரி சிறப்பு பேராசிரியை, தனது வேலையை ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில், கடந்த ஒரு மாத காலமாகவே ஹிஜாப் மற்றும் காவித் துண்டு விவகாரம், நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அங்குள்ள உடுப்பி மாவட்டத்தில் துவங்கிய இந்தப் போராட்டம், மாநிலத்தின் பல பகுதிகளில் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில், கல்லூரி வாளகத்தில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்ததால், தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவர், சுய மரியாதை தான் முக்கியம் எனக் கூறி, தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக மாநிலம் துமகூரு நகரில் உள்ளது ஜெயின் பியூ கல்லூரி. இந்தக் கல்லூரியில் ஆங்கிலத்துறையில், சிறப்பு பேராசிரியராக பணியாற்றியவர் சாந்தினி நஸ். இவர் தனது வேலையை ராஜினாமா செய்வதாகக் கூறி, கல்லூரி முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “இந்தக் கல்லூரியில், நான் கடந்த 3 ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்து வந்துதான் பாடம் எடுத்து வந்தேன். தற்போது இதை அகற்றும்படி கூறுவதால், எனது விரிவுரையாளர் பணியை ராஜினாமா செய்து கொள்கிறேன். மதம் சார்ந்த உரிமைகளை பின்பற்ற அரசியல் சாசனம் அனுமதிப்பதை, யாராலும் மறுக்க முடியாது. ஜனநாயகமற்ற உங்களின் செயலை கண்டிக்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கடந்த மூன்று ஆண்டுகளாக, ஜெயின் பியூ கல்லூரியில் சிறப்பு விரிவுரையாளராக இருந்துள்ளேன். எந்தப் பிரச்சினையும் இந்தக் காலகட்டத்தில் வந்ததில்லை. மிகவும் நன்றாகவே வேலைப் பார்த்து வந்தேன. ஆனால், நேற்று காலை பிரின்சிபால் என்னை அழைத்து, தங்களுக்கு வந்துள்ள உத்தரவுப்படி, நான் ஹிஜாப்போ அல்லது வேறு மத அடையாளத்துடனோ வந்து, பாடம் நடத்தக் கூடாது என்று கூறுகிறார். இந்தப் புதிய உத்தரவு எனது சுய மரியாதையை பாதிப்பதாக உள்ளது. எனவே, நான் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன்” என்று வீடியோ ஒன்றையும் பதிவு செய்து, பேராசிரியை சாந்தினி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ஜெயின் பியூ கல்லூரி முதல்வர் கே.டி. மஞ்சுநாத், சாந்தினியின் குற்றஞ்சாட்டை மறுத்துள்ளார். நானோ அல்லது வேறு யாருமோ ஹிஜாப் அணியக் கூடாது என்று அவரிடம் கூறவில்லை. ஹிஜாப்பை அகற்றுமாறும் நாங்கள் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com