கர்நாடக ஹிஜாப் விவகாரத்தில் 'அல்லாஹு அக்பர்' என கோஷமிட்டு எதிர்ப்பினை காட்டிய மாணவி முஸ்கன் கானை ஆர்எஸ்எஸ் முஸ்லீம் பிரிவு ஆதரித்துள்ளது. "ஜெய் ஸ்ரீராம்" என்று கோஷமிடும் மாணவர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அது தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஒரு கல்லூரியில் சில நாட்களுக்கு முன்னர் காவி துண்டினை அணிந்து "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்ட மாணவர்கள் கூட்டத்தை எதிர்கொண்டு, "அல்லாஹு அக்பர்" என்று பதில் கோஷம் எழுப்பிய ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவி முஸ்கன் கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தற்போது ராஷ்டிரிய ஸ்வயம்சேவக்கின்( ஆர்எஸ்எஸ்) முஸ்லிம் பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், கர்நாடகாவில் ஹிஜாப் போராட்டத்தின் போது கவனம் ஈர்த்த கர்நாடக மாணவி முஸ்கன் கானுக்கு ஆதரவளித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்சின் அவத் பிராண்ட் சஞ்சாலக் அனில் சிங், "முஸ்கன் கான் எங்கள் சமூகத்தின் மகள் மற்றும் சகோதரி. இந்த நெருக்கடியான நேரத்தில் நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்கிறோம். இந்து கலாச்சாரம் பெண்களுக்கு மரியாதை செய்ய கற்பிக்கிறது, இதன்படி 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட்டு மாணவியை அச்சுறுத்த முயன்றது தவறு.
பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு அரசியலமைப்புச் சுதந்திரம் உள்ளது. ஒருவேளை அவர் கல்லூரி வளாக ஆடைக் குறியீட்டை மீறியிருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்க நிறுவனத்திற்கு உரிமை உண்டு. ஆனால், மாணவர்கள் காவி துண்டினை அணிந்துகொண்டு 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கமிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்கள் இந்து கலாச்சாரத்தை இழிவுபடுத்தியுள்ளனர்" என்று கூறினார்.
மேலும்,"ஹிஜாப் அல்லது பர்தா இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இந்து பெண்களும் விருப்பப்படி பர்தாவை அணியலாம் அதே நிபந்தனை பீபி முஸ்கானுக்கும் பொருந்தும். முஸ்லிம்கள் எங்கள் சகோதரர்கள், இரு சமூகத்தினரின் டிஎன்ஏவும் ஒன்றுதான். முஸ்லிம்களை தங்கள் சகோதரர்களாக ஏற்றுக்கொள்ள இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்தார்
கர்நாடக மாணவி முஸ்கன் கானுக்கு ஜமியத் உலமா-இ-ஹிந்த் (JuH) ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.