மைசூர் நகர்புற மேம்பாட்டு ஆணையம் (Mysuru Urban Development Authority (MUDA) ), சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத நிலத்தை எடுத்துக்கொண்டு நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலத்தை வழங்கியது.
இந்த இடம் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால், அரசுக்கு 4,000 கோடி ரூபாய் இழப்பு என்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த முடா முறைகேடு குறித்து, முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த, கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், ஆகஸ்ட் 17ம் தேதி அனுமதி அளித்தார்.
இந்த அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வலியுறுத்தி, முதல்வர் தரப்பில், ஆகஸ்ட் 19ம் தேதி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் முதல்வர் சித்தராமையாவின் தரப்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ரவிவர்மா குமார், ஆளுநர் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி, புகார்தாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பு வாதங்களும், இம்மாதம் 12ம் தேதியுடன் நிறைவடைந்தன.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இந்த வழக்கில் இன்று நண்பகல் 12 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், முடா வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் வழக்கு தொடரும் வகையில் ஆளுநரின் உத்தரவை உறுதி செய்துள்ளது.
உத்தரவை வாசித்த நீதிபதி நாகபிரசன்னா, “ஆளுநர் 17A பிரிவின் கீழ் விசாரணைக்கு அனுமதி வழங்கியது ஏற்கக்கூடியது. அவருக்கு அந்த அனுமதி வழங்குவதற்கு முகாந்திரம் இருக்கிறது. அதேபோல் தனிநபர்கள் புகாரளிக்கவும் அனுமதி உள்ளது. இதில் தடைவிதிக்க முடியாது” என தெரிவித்து முதலமைச்சருடைய மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் செயல்பாடுகளில் எந்த தவறும் இல்லை என தெரிவித்த நீதிபதி, விசாரணைக்கு அனுமதி அளித்தது அவரது தனிப்பட்ட முடிவு என்பதால் அதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் தேவையில்லை என்றும் கூறினார்.
தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் முதலமைச்சர் சித்தராமையாவையும், காங்கிரஸ் அரசையும் பதவி விலகுமாறு பாஜக அறிவுறுத்தி வருகிறது. கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் இதுதொடர்பாக கூறுகையில், “மீண்டும் சொல்கிறேன். இதில் முதலமைச்சருக்கு எந்த பின்னடைவும் இல்லை. இது எங்கள் தலைவருக்கு எதிராக பின்னப்பட்ட சதி. இதை எதிர்த்து போராடுவோம். சட்ட அமைப்பை மதிக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.
முதல்வர் சித்தராமையாவிற்கு எதிராக தீர்ப்பு வந்துள்ள நிலையில், இது அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்கும். அதேநேரம் இது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது வரை அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய சூழலில் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இல்லத்தைச் சுற்றியும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கவும், முதல்வருக்கு எதிரான தீர்ப்பு வரும் பட்சத்தில் தர்ணா, கலவரம், போராட்டம் போன்றவற்றிற்கு வாய்ப்பு உள்ளதால் இத்தகைய நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூத்த பத்திரிக்கையாளர் தட்சிணாமூர்த்தி இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் கூறுகையில், “சித்தராமையாவிற்கு இது பின்னடைவுதான். ஆனால், இது முடிவு அல்ல. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள். உச்சநீதிமன்றத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டுதான் அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்வார்கள்” என தெரிவித்தார்.
இதனிடையே, நாளை காலை 10 மணிக்கு அமைச்சரவை கூட்டத்திற்கு முதலமைச்சர் சித்தராமையா அழைப்புவிடுத்துள்ளார்.